1. இஸ்ரேல் என்ற நாடு மீண்டும் மீண்டும் அதன் எதிரிகளால் தாக்கப்படுகிறது; இஸ்ரேல் செய்வது வெறும் தற்காப்பு மட்டுமே!
இஸ்ரேலின் வரலாற்றில் அது தாக்கப்பட்டதைவிட அது தாக்கிய நிகழ்வுகளே பெரும்பான்மை. 1956-ல் சினாய் தீபகற்பத்தையும் காஸாவையும் தாக்கி அபகரித்துக் கொண்டது இஸ்ரேல். பின்னர் ஐசன்ஹோவர் தலையீட்டாலேயே பின்வாங்கியது. 1967-ல் தான் தாக்கப்பட்டதாகக்கூறி எகிப்து, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளைத் தாக்கியது. ஆறுநாள்போர் முடிந்தவுடன் தான் தாக்கப்படும் முன்னதாகவே தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேல் ஒத்துக் கொண்டது. உண்மையில் நீண்டநாள் முன்பே முடிவு செய்யப்பட்ட தாக்குதல் திட்டம் தான் இது எனப் பின்னர் தெரியவந்தது. 1978-ல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கக் கப்பல் USS லிபர்ட்டியையும் விட்டுவைக்கவில்லை. அது US கப்பல் எனத் தெரிந்தே தான் தாக்கியது. (The Israeli military court of inquiry later acknowledged that their naval headquarters knew at least three hours before the attack that the ship was "an electromagnetic audio-surveillance ship of the U.S. Navy")
இது குறித்த BBC ஆவணப்படம் காண இங்கு சொடுக்குங்கள்.
(குறிப்பு: அரபுநாடுகள் புனிதர்கள் என வாதிடுவதல்ல எனது நோக்கம்; இஸ்ரேல் தற்காப்பிற்காகத் தாக்குதல் தொடுக்கிறது என்ற பொய்யை உடைப்பதே பிரதானம்)
2. இஸ்ரேல் அமைதியை மட்டுமே நாடுகிறது; ஒவ்வொரு முறையும் அதன் அமைதி முயற்சிகள் தோல்வி அடைகின்றன.
நப்லுஸ், காஸா என்ற பகுதிகள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்குப் பொழுதுபோகாவிட்டால் ராணுவ டேங்குகளை ஓட்டி கல்லெறியும் சிறுவர்களைச் சுட்டுப் பழகும் இடமாகி இருக்கின்றன. அதிகத் தொலைவு போக வேண்டாம். மிகச் சமீபத்தில் அன்னாபொலிஸ் என்ற இடத்தில் இஸ்ரேல் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் தண்ணீரில் எழுதிய கதைகள் ஆகி உள்ளன.
3. பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் இருப்பிற்கான உரிமையை ஏற்பதில்லை.
ஆஸ்லோவில் நடந்த அமைதி ஒப்பந்தத்தில் யாசர் அரபாத் இஸ்ரேலின் இருப்பிற்கான உரிமையை ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இஸ்ரேல் என்று மேற்கத்திய ஆதிக்க உலகம் வலிந்து திணித்து உருவாக்கிய இடத்தின் குடிமக்கள் என அறியப்பட்டவர்களுக்கு கடவுச்சீட்டு உள்ளது. இன்றுவரை பாலஸ்தீனம் என்று சொல்லப்படும் இடத்தின் குடிமக்கள் எவருக்காவது கடவுச்சீட்டு இருக்கிறதா?
சரி இன்றுவரை பாலஸ்தீனம் என்றொரு நாட்டின் இருப்பை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளதா?
4. இன்றைய இஸ்ரேல் என அறியப்படும் இடங்களின் பூர்வகுடிகள் அங்குத் திரும்பக்கூடாது; அது இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்.
இன்றைய இஸ்ரேல் என்ற பகுதிக்குத் திரும்ப ஜியோனிஸ்டுளுக்கு உரிமையை யார் கொடுத்தார்? யார் அப்பன் வீட்டுச் சொத்து அது?
5. பாலஸ்தீனர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே!
இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அங்கிருந்த பாலஸ்தீனர்களைப் பலவந்தமாக விரட்டியது யார்? அவர்களை விரட்ட அரசப் பயங்கரவாதத்தைப் பிரயோகித்தது யார்? கூட்டம் கூட்டமாக மக்களைக் கொல்வது, அவர்களை அச்சுறுத்துவது, விரட்டுவது இவை எல்லாமே இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைகள் என நம்பித் தொலைப்போம்.
6. எங்கிருந்தோ வந்திருந்தாலும் அவ்வாறு வந்த நாங்கள் பாலஸ்தீனர்களை அமைதியாக வாழ அனுமதிக்கிறோம்;
ஒரு ஊரில் ஒரு ரவுடி இருந்தானாம்; அவன் இன்னொரு பெரிய ரவுடி உதவியோடு ஒருத்தர் பண்ணையில் வலுக்கட்டாயமாக நுழைந்து அந்த பண்ணை முதலாளியை வெளியே விரட்டிவிட்டனராம். என்ன இது நியாயம் என்று கேட்டவரிடம், இங்கே பார்; அமைதியாக ஓரமாக அவுட் ஹவுசில் இருந்தால் இரு; இல்லையேல் உன்னைக் கொன்றுவிடுவோம் என்று சொன்னானாம். ஆஹா இந்த ரவுடி அல்லவோ அமைதிவிரும்பி!
இப்போதைக்கு இவை மட்டும், இன்னும் தோன்றினால் எழுதுகிறேன்.