Thursday, January 3, 2008

ஹஜ் பயணத்தில் உயிரிழப்புகள்!

பதிவர் கோவி கண்ணன் அவர்கள் புனிதத் தலங்களுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பலர் அப்புனிதத் தலங்களில் இருக்கும் சரியான வசதிக் குறைவுகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆதங்கப்பட்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.



நியாயமான கவலை தான். முஸ்லிம்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையாவது தம்மால் இயன்றால் மட்டும் இந்த ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும். ஹஜ் புனிதக் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் மக்கள் கூடும் இடத்திற்குச் சென்று வந்த எவரும் அங்கு வசதிக்குறைவினால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகச் சொல்லமாட்டார்கள்.



அங்கு செல்லும் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் (கூட்ட நெரிசல்களைத் தவிர்ப்பது, கையோடு எடுத்துச் செல்லும் சுமைகளை எப்படிக் கையாளுவது, இன்ன பிற) என இப்போதெல்லாம் பயணம் துவங்கும் முன்பே பயிற்சி அளிக்கிறார்கள்.



கூட்ட நெரிசல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் சென்ற ஆண்டுகளில் ஹஜ் பயணிகளின் நடவடிக்கைகளாலேயே நிகழ்ந்தன. ஆனால் இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாமல் ஹஜ் நிகழ்வு கழிந்தது.



சாதாரணமாக ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் மிகச்சிறு அளவிலானோர் இயற்கை மரணம் எய்துவதுண்டு. இது இயல்பானதே. உலக அளவில் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் ஏன் அதற்கு உட்பட்டவர்கள் கூட மாரடைப்பில் இறக்கின்றனர். ஜித்தாவில் இருக்கும் இந்தியத் துணைத் தூதரகம் இந்தியாவில் இருந்து ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கு நிறைய சேவைகள் அளித்து வருகிறது. அவர்கள் இந்திய ஹஜ் கமிட்டி வழியாக வந்தாலும் அல்லது பிரைவேட் ஹஜ் ஆப்பரேட்டர்கள் மூலம் வந்தாலும். (இங்கு ஒரு குறிப்பு சொல்வது நலம். ஏதோ ஹஜ் மானியம் என்று சிலர் கூப்பாடு போடுகிறார்கள்; ஹஜ் கமிட்டியின் வழியாக வருபவர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையிலானோர் பிரைவேட் ஆப்பரேட்டர்கள் மூலமாக வருகின்றனர். இவர்களுக்கு ஹஜ் மானியம் எல்லாம் கிடையாது; அது பற்றி விரிவாகப் பிறிதொரு சமயத்தில்) இந்தியத் துணைத் தூதரகம் வருடாவருடம் ஹாஜிகளில் இறந்தோரின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும். இவ்வாண்டு இறந்த இந்திய ஹாஜிகள் 144 பேர் என அதன் தளம் சொல்கிறது.



தினமலர் என்றொரு உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கை உள்ளது. அதன் சார்பு என்ன அதன் பத்திரிகை (அ)தர்மம் என்ன என விளக்க வேண்டியதில்லை. நான் மேலே சொன்ன சாதாரண செய்தியை அது விவரிக்கும் விதம் பாருங்கள்: ஹஜ் பயணத்தில் 227 இந்தியர் மரணம்.



இதைப் படிக்கும் எவருக்கும் உடனடியாக என்ன தோன்றும்? வழக்கம் போல இந்த ஆண்டும் ஹஜ் பயணம் சென்று 227 இந்தியர்கள் காலி (காவிகளுக்கு இச்செய்தி மகிழ்ச்சி தரலாம்). இந்த செய்தியை முதுவை ஹிதாயத் என்பவர் சற்றுமுன் என்றொரு தளத்தில் அப்படியே வெட்டி ஒட்டுகிறார். செய்தியை உள்ளபடிக் கொடுக்க நினைத்திருந்தால் உள்ளடக்கத்தைப் படித்து அதன் தகவல்களைப் பரிசீலித்துத் தான் உள்ளதை உள்ளபடி தரவேண்டும். அதைவிடுத்து அப்படியே வெட்டி ஒட்டியது என்னாயிற்று?



கோவிகண்ணன் போன்ற மனித நேயர்கள் ஹஜ் பயணம் இறுதிப் பயணம் என்று விமர்சிக்கும் அளவுக்கு மேற்படி தகவல் கையாடல் வழிவகுத்து விட்டது.


குறிப்பு: நான் பதிவுலகிற்குப் புதியவனல்லன். பதிக்கும் அளவுக்குத் தேறியது இப்பொழுது தான்.

6 comments:

கோவி.கண்ணன் said...

//கோவிகண்ணன் போன்ற மனித நேயர்கள் ஹஜ் பயணம் இறுதிப் பயணம் என்று விமர்சிக்கும் அளவுக்கு மேற்படி தகவல் கையாடல் வழிவகுத்து விட்டது.//

நண்பரே,

எனது கட்டுரையில் சபரிமலையில் பக்தர்கள் இறந்ததையும் சேர்த்தே குறிப்பிட்டு இருக்கிறேன். எனவே எனது கருத்தை மதத்தின் மீதான விமர்சனமாக பார்க்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

அபு முஜாஹித் said...

நல்ல பதிவு சவூதி தமிழன்.

கோவி கண்ணன் சார், உங்கள் கருத்தை யாரும் தவறாக நினைக்கவில்லை. உங்கள் மனித நேயம் வலையுலகம் அறிந்ததே.

சவூதி தமிழன் said...

//எனது கருத்தை மதத்தின் மீதான விமர்சனமாக பார்க்கமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.//

இல்லை நண்பரே! சபரிமலை நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்துச் சொல்லவில்லை.

ஹஜ் பயணம் குறித்துத் தெரியும். அதோடு இவ்வாண்டு எவ்வித அசம்பாவிதமும் இல்லை. அதனைச் சுட்டவே இந்தப் பதிவு!

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!

சவூதி தமிழன் said...

சகோதரர் அபூமுஜாஹித்,

//நல்ல பதிவு சவூதி தமிழன்.//

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!

சுட்டுவிரல் said...

நெறய எழுதுங்க சார்!

சவூதி தமிழன் said...

சுட்டுவிரல் சார்,

வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி சார்!